தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவும், மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தச் சூழலில் 119 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரான சந்திரசேகர் ராவ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் பாரத ராஷ்டிர சமிதி என மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், "திமுகவினர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்தியா கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்கு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திமுக கட்சியின் அனைத்து பிரிவுகளும், தொண்டர்களும் பாடுபட வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் திமுக சார்பில் அனைத்து அமைப்புகளும் பணிக்குழு அமைத்துப் பணியாற்ற வேண்டும்” என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.