இன்று (02.02.2021) தமிழக சட்டசபைக்குச் சென்ற மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, ‘கலவரத்தை தூண்டும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்ற பதாகையை தூக்கிச் சென்றார்.
கவர்னர் உரையாற்றியதை அடுத்து சட்டசபையின் இன்றைய கூட்டம் நிறைவுற்றது. பிறகு வெளியே வந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் கவர்னர் உரை குறித்து பேசியதாவது; “கவர்னர் உரை கடந்த ஒராண்டின் பத்திரிகை செய்திகளின் தொகுப்பாக இருக்கிறது. சடங்கு, சம்பிரதாயப்பூர்வ உரையாக, உற்சாகமற்ற ஒரு உரையாக இருந்தது” என்று கூறினார்.
பிறகு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. இது தொடர்பாக பேரவை மற்றும் தமிழக அமைச்சரவையின் தீர்மானங்களை கவர்னர் தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரில் தமிழக அரசு இதற்கு அழுத்தம் தர வேண்டும். ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலையில் மெளனம் காப்பது ஏமாற்றம் அளிக்கிறது” என்று கூறினர்.