தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத்திற்கான வாக்குப் பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கான பணிகளைத் துவங்கின. பொதுவாக கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு கனிசமான தொகையைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வழங்கும். சில சமயங்களில் தனது கூட்டணி கட்சிக்கான தேர்தல் செலவையும் தலைமை கட்சியே வழங்கும்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், 2வது நாளாக, நேற்று (02.03.2021) நடந்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, விழுப்புரம், நெல்லை மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில், 'பிரச்சார செலவை வேட்பாளர்களே ஏற்க வேண்டும்; கட்சி ஏற்காது' என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலின் இந்த அறிவிப்பினால், மநீம சார்பாக போட்டியிட முன்வந்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.