காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயல் தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம், புதுச்சேரி கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களின் தீர்ப்புக்காக ஆண்டவர்களும், ஆளத் துடிப்பவர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் முடிந்தாலும், தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்கள், தேர்தல் முடிவு தெரிவதற்காக மே இரண்டாம் தேதி வரை காக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்குக் காரணமாக மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு கட்டத் தேர்தல்களில் இறுதித் தேர்தல், ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெறுவது சுட்டிக் காட்டப்படுகிறது. மேற்கு வங்கத்திலும் பலகட்டத் தேர்தல்களைச் சுருக்கி, தேர்தல்களை விரைவாக நடத்தி முடித்து, வாக்கு எண்ணிக்கைக்கான தேதியை முன்கூட்டியே அறிவிக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதற்கான செலவினங்களையும் குறைக்கலாம்; விரும்பத்தகாத குற்றச் செயல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்கலாம். இந்தக் கருத்துகளை உள்வாங்கி, தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்" என்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.