Skip to main content

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு... அதிருப்தியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ்!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

pmk


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் நாளை (07/05/2020) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மதுக்கடைகள் வரும் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவாகும். ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இதுவரை 40 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், மது கிடைக்காததால் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. மதுவுக்கு அடிமையாகி, அது இல்லாவிட்டால் வாழவே முடியாது என்று வர்ணிக்கப்பட்டவர்கள் கூட, இப்போது மதுவை மறந்து விட்டு புதிய மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். 

இதைப் பயன்படுத்தி தமிழகத்தை மதுவில்லாத திசையில் பயணிக்க வைக்க வேண்டிய தருணத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறந்திருப்பது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவாகும். இந்தத் தவறான முடிவால் கடந்த 6 வாரங்களாக விளைந்த நன்மைகள் அனைத்தும் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்காகத் தமிழக அரசு கூறியுள்ள காரணம் சற்றும் ஏற்க முடியாதது. அதுமட்டுமின்றி, மதுவிலக்கு என்ற கோரிக்கை எழும் போதெல்லாம், ''கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு இருக்கிறது'' என்ற பழைய வசனத்தைக் கூறியே கடந்த கால ஆட்சியாளர்கள் மதுவிலக்கை மறுத்து வந்துள்ளனர். 

 


அதேகாரணத்தை இப்போதைய அரசும் கூறுவது சரியல்ல. அண்டை மாநிலங்களுக்கு மது அருந்த ஒரு சிலர் சென்றிருக்கலாம். அது தமிழகத்தின் மக்கள் தொகையில் 0.0001% கூட இருக்காது. அவர்களுக்காக தமிழகத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களைப் பாதிக்கும் வகையில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை ஏற்க முடியாது. மதுக்கடைகள் திறக்கப்பட்டால் நோய்த் தொற்று பரவும் வேகம் மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, கடந்த 40 நாட்களாக இல்லாமல் இருந்த சட்டம்& ஒழுங்கு பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். எனவே இம்முடிவை அரசு கைவிட வேண்டும், மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டுள்ளார். அதிமுக அரசு மீது மருத்துவர் ராமதாஸ் டாஸ்மாக் விவகாரத்தில் தனது அதிருப்தியைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்