மே 30ஆம் தேதி டெல்லியில் நடந்த பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழிசை சௌந்திரராஜன் கலந்து கொண்டார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்று கொண்ட அற்புதமான நிகழ்விற்கு கட்சிக்காக உழைத்த தொண்டர்களான மாவட்ட தலைவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் போலவே அழைப்பு விடுத்து அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இது தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தி பணியாற்றுவோம்.
இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும். மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்லும். இன்னும் பல வெற்றிகள் பல மாநிலங்களில் குவிக்க இருக்கிறது. தமிழகத்திலும் பா.ஜனதா பலம் பெற இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா பலம் பெற பலம் பெற தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
பாஜகவிற்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்ற தவறான பிரசாரம் எதிர்கட்சிகளால் செய்யப்படுகிறது. பா.ஜனதா தமிழகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு இருக்கிறது. பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அடிப்படையில் எங்களுடைய பணி இருக்கும். மக்களுக்கு எதிரான, மக்களுக்குத் துன்பம் தரக் கூடிய பிரச்சனைகளை இந்த அரசு ஆதரிக்க போவதில்லை என்றார்.