தேனி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றம் எம்.பி ஆகியோர் கலந்து கொள்வர் என செய்தித் துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதற்காக சமூக இடைவெளியுடன் கூடிய பெரிய அரங்கு ஒன்றில் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உருவ படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக எம்.பி.யும் ஒ.பி.எஸ். மகனுமான ரவீந்திரநாத், முதல்வர் படம் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் படம் உள்ள அந்த அரங்கில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தினால் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று மாவட்ட அதிகாரியிடம் கூறியதாகவும் இதனால் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண உன்னி உடனடியாக கலெக்டர் அறைக்கு அருகே உள்ள சிறிய அளவிலான கூட்டரங்கில் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் இல்லாத கூட்ட அரங்கில் தடுப்பு கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து நடந்த அந்தக் கூட்டத்தில் அதிமுக எம்.பி. கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களான கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் கரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும் அரங்கம் சிறியதாக இருந்ததால் சமூக இடைவெளி இல்லாமல் எம்.பி. எம்.எல்.ஏ.கள் மற்றும் அதிகாரிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அமர்ந்து இருந்தனர்.