Skip to main content

“7 பேர் விடுதலை; தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்ற வேண்டும்” - திருமாவளவன் 

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

The Tamil Nadu cabinet should pass a resolution ”- Thirumavalavan

 


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அந்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். 

 

இந்நிலையில், மீண்டும் ஒரு தீர்மானத்தை புதிய அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி விரைவாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று விசிக கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாகக் குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் காட்டியிருக்கும்  அக்கறையைப் பாராட்டுகிறோம்.  ஆனால் அதே நேரத்தில் மாநில அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இந்த விடுதலையை சாத்தியப் படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கு மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறோம்.

 

கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை சுமார் 2 ஆண்டு காலம் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் சிபிஐயின் பல்நோக்கு விசாரணை முடிவடையாததைக் காரணமாகக் கூறினார். ஆனால் அந்த விசாரணைக்கும் 7 பேர் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்பிறகும் முடிவெடுக்காமல் தாமதப்படுத்திவந்த ஆளுநர் கடைசியில் குடியரசுத் தலைவர்தான் இதில் முடிவெடுக்கவேண்டும். எனவே அவருக்கு அனுப்பி விட்டேன் என்று கூறிவிட்டார்.  அப்படி அவர் அனுப்பியிருந்தால் அது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். மாநில அரசின் அதிகாரத்தை மீறியதாகும்.

 

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 தண்டனை குறைப்புச் செய்ய மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது எனக் கூறுகிறது. அது பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் அதில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்த ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக அமையும் ஆபத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

 

7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. அவர்களின் தன்னலம் காரணமாகவே 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது. அந்த தவறை சரிசெய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது. எனவே 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும்வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்