ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் பதவியேற்றனர். அந்த வகையில் சசிகாந்த் செந்தில், டி.ஆர்.பாலு, ஆ.ராசா எஸ். ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், மாணிக்கம் தாகூர், கே.சுப்பராயன், தொல்.திருமாவளவன், கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், சி.என். அண்ணாதுரை, சு.வெங்கடேசன், செல்வ செல்வகணபதி, விஷ்ணு பிரசாத், கே.நவாஸ்கனி, க.செல்வம், விஜய் வசந்த், ரவிக்குமார், மலையரசன், ஈஸ்வரசாமி, சுதா, ராணி ஸ்ரீ குமார், மாதேஸ்வரன், சச்சிதானந்தம், செல்வராஜ், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம், ஆ.மணி, தரணிவேந்தன், கணபதி ராஜ்குமார், பிரகாஷ், துரை வைகோ, முரசொலி, அருண் நேரு, தங்க தமிழ்ச்செல்வன் என 39 பேரும் தமிழில் பதவியேற்று கொண்டனர்.
இவர்களில் பலரும் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டும் தி.மு.க எம்.பி.க்கள் பதவியேற்றனர். அதோடு சிலர், ‘வருங்காலம் எங்கள் உதயநிதி’ எனக் கூறியும் பதவியேற்றனர்.
இதில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி கே.கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. தெலுங்கில் பதவியேற்றது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், அவர் பதவியேற்ற பின் இறுதியாக, ‘நன்றி, வணக்கம்’ எனக் குறிப்பிட்டு ‘ஜெய் தமிழ்நாடு’ எனக் கோஷம் எழுப்பினார்.