த.மா.கா மேற்கு மண்டலம் சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் 9ந் தேதி காலை நடைபெற்றது. அதற்கு தலைமை வைத்து ஜி.கே. வாசன் பேசும்போது, "திமுக தனது தேர்தல் அறிக்கையில் கரோனா பிரச்சனையிலிருந்து பொது மக்களின் பொருளாதாரம் முழுமையாக மீண்ட பிறகு சொத்து வரி உயர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியது. ஆனால், தற்போது மத்திய அரசு மீது பழியை சுமத்தி சொத்து வரியை திமுக அரசு 25 சதவீதத்திலிருந்து 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இது பேரிடியாக உள்ளது. வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வாடகை செலுத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
பொருளாதாரம், தொழில்கள் முழுமையாக மீளவில்லை விலைவாசி உயர்ந்து வருகிறது. வருமானம் பழையபடி இல்லை. எனவே, சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால், சொத்து வரியை மட்டும் கடுமையாக உயர்த்தி உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் இது குறித்து வாய்திறக்கவில்லை. ஆனால், மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடியும்.
அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக தாலிக்கு தங்கம், பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் தருவதாக கூறியது வழங்கவில்லை, கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படவில்லை, மகளிருக்கு பேருந்து இலவச பயணம் அனுமதித்துள்ளது வரவேற்கிறோம். ஆனால், முறையாக பேருந்துகள் நின்று பெண்களை ஏற்றிச் செல்ல வேண்டும். தற்போது நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கொங்கு மண்டலத்தில் ஜவுளித் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதை தீர்க்க வேண்டும். மின் தடை கடுமையாக உள்ளது நமது மாணவ மாணவிகள் படிக்க சிரமப்படுகின்றனர். மத்திய அரசு போதுமான அளவு மின்சாரம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரித்து மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளது. விசாரணை கைதிகள் காவல் நிலையங்களில் தாக்கப்படுகின்றனர். கொலை கொள்ளை வன்கொடுமை சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏன் தூக்கு தண்டனை வழங்கினாலும் தவறில்லை. இதேபோன்று பள்ளிகள் கல்லூரிகளில் தற்பொழுது போதைப் பழக்கத்துக்கு மாணவ மாணவிகள் அடிமையாகும் சூழ்நிலை உள்ளது. போதைப் பொருள் எங்கிருந்து யாரால் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி தடுக்கப்பட வேண்டும். மாணவ மாணவிகளை பாதுகாக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக புதிதாக கடைகள் உருவாக்கப்படுகின்றன" என்றார். தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் ஈரோடு யுவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.