மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் தோட்டம் பால்பண்ணை என்ற பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (04.03.2024) காலை திறந்து வைத்தார். அதன் பின்பு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ரூ.656 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, அம்மாவட்டத்தில் 12,563 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “பழமையான திருக்கோவில்கள் நிறைந்த மாவட்டம் மயிலாடுதுறை. மண் மணமும், நெல் மணமும் கலந்து வீசுவது டெல்டா மாவட்டங்களின் சிறப்பு. புதிய மாவட்டங்கள் அறிவிப்பது பெரிதல்ல, உட்கட்டமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும். திமுக ஆட்சி அமைந்ததும் மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்து ஒன்றரை ஆண்டுக்குள் ஆட்சியர் அலுவலகம் கட்டியுள்ளோம். மாவட்டங்களுக்கான உட்கட்டமைப்புகள் திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. அரசாணைகளை உரிய முறையில் நடைமுறைக்கு வருவதை உறுதிசெய்யும் அரசு திராவிட மாடல் அரசு. திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் 2 நாட்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் திருவோணம் புதிய தாலுகா செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மக்களின் கருத்துகளை அறிய ‘நீங்கள் நலமா’ என்ற திட்டம் வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர், முதலமைச்சராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு கருத்தை கேட்டறிய உள்ளேன். அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் மோடி அடிக்கடி தமிழ்நாடு வரத் தொடங்கி இருக்கிறார். வாக்கு மட்டும் போதும் என்று நினைத்து தமிழ்நாட்டுக்கு மோடி வருகிறார். அண்மையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட 2 இயற்கை பேரிடர்களுக்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், உரிமைக்காகவும் பாடுபடும் திராவிட மாடல் அரசின் பக்கமே மக்கள் நிற்பார்கள்” என்று கூறினார்.