முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இடையில் நீதிமன்ற தடை காரணமாக விசாரணையில் தடங்கல் ஏற்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளைக் கடந்து தற்போது விசாரணை மீண்டும் வேகமெடுத்துள்ளது.
இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு, ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் அப்போலோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரியிருந்தது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்போலோ மருத்துவமனையின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் "ஆணையம் அவர்களை (மருத்துவர்களை) விசாரிக்க எந்த தடையும் இல்லை" எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில், அப்போலோ மருத்துவர் ராமசுப்ரமணியம் இன்று மறுவிசாரணைக்கு ஆஜரானார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, இந்த வழக்கில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று மனு அளித்தார். புகழேந்தி அளித்துள்ள இந்த மனுவால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.