கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான்காவது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (14/04/2020) உரையாற்றினார். கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளில் ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், "மக்கள் நலனே முக்கியம் என்பதால் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தொடர்பான கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குப் பதிலாக தலைமைச் செயலாளரும், சுகாதாரத் துறை செயலாளரும் பேட்டி கொடுப்பது ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் கூறும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.அப்போது பேசுகையில், நோய்த் தொற்று பரவ திமுகதான் காரணமாக இருந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் கூட அதிமுக அரசியலில் எந்தக் குறையும் காண முடியாது. முதல்வரின் யதார்த்தமான கருத்துகளைக் கூட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். அதிமுக அரசின் செயல்பாடுகளை மக்கள் பாராட்டும் நிலையில் அதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
பின்பு, அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கரோனா பரவ திமுக தான் காரணம் எனப் பச்சைப் பொய் கூறிய அமைச்சருக்கு கண்டனம். அதிமுக அமைச்சரைப் பிடித்திருக்கும் அவதூறு பரப்பும் நோயில் இருந்து விரைந்து நலம் பெறட்டும். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை எனக் கண்டனம் தெரிவித்து இருந்தார் திமுக பொருளாளர் துரைமுருகன். மேலும் அமைச்சர் ஜெயக்குமார், திமுக மீது குற்றம் சாட்டி வருவதற்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.