தமிழகத்தில் தற்போது கரோனா நோய் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசானது இரவு-பகல் பாராமல் உழைத்து, தற்போது அந்த நோய் தாக்கத்தின் பாதிப்பைக் குறைக்க தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. அதன்படி மாவட்டங்களைக் கண்காணிக்க அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நோய் தொற்றைத் தடுத்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறித்தும், இறப்பு விகிதத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
எனவே தற்போது அமைச்சர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து கரோனா தடுப்பு பணிகளை தொடர்ந்து செய்துவருகின்றனர். மேலும், ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று கள ஆய்வு நடத்தும் பணியை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்து செய்துவருகிறார். இந்நிலையில், 3 நாள் சுற்றுப்பயணமாக சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை நேரில் சென்று கள ஆய்வு நடத்த திட்டமிட்டு, தற்போது தன்னுடைய கள ஆய்வு பணியைச் செய்ய நாளை (21.05.2021) 1:30 மணி அளவில் திருச்சிக்கு வருகை தர உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையை நேரில் சென்று கள ஆய்வு செய்துவிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் கள நிலவரம் குறித்து கலந்துரையாடி, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள உள்ளார். நெல்லையில் மு.க. ஸ்டாலின் தன்னுடைய தொண்டர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அதில், “எவ்வித காரணத்தைக் கொண்டும் தொண்டர்கள் என்னை வரவேற்கும் விதமாக பேனர்கள், பதாகைகள், கட்சியின் கொடிகள் போன்றவற்றை சாலைகளில் ஒருபோதும் வைக்கக் கூடாது. குறிப்பாக என்னைப் பார்ப்பதற்காக ஒருபோதும் கூட்டம் கூடி நிற்கக்கூடாது” என்று மிக கண்டிப்போடு தெரிவித்து அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். நான் இப்போது ஒரு கட்சியின் தலைவராக வராமல், தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரசு சார்ந்த அலுவலக பணிக்காக வருவதால் தொண்டர்கள் என்னுடைய அன்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.