நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடந்து வருகிறது. இன்று சபை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கேள்வி நேரத்தில் பேசிய பேரவையின் திமுக துணைத்தலைவர் துரைமுருகன், " ஜல்லிக்கட்டு நாயகர் என ஓபிஎஸ்சை அழைக்கிறீர்கள். எந்த ஜல்லிக்கட்டுக்குப் போட்டியில் அவர் கலந்துக்கிட்டார்? எப்போது மாடு பிடித்தார்? எங்களுக்கு தெரியவில்லை. இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கு அவர் மாடு பிடித்தால் அதைப்பார்க்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்'' என்று சொல்ல, சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
துரைமுருகன், இப்படி நையாண்டி செய்த சமயத்தில் ஓபிஎஸ் சபையில் இல்லை. ஒரு கட்டத்தில் வேறு ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், துரைமுருகனின் பேச்சுக்கு எதிர்வினையாற்றினார்.
விஜயபாஸ்கர் பேசும் போது, "2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற டெல்லி வரை சென்று சட்டம் நிறைவேற போராடியவர் ஓபிஎஸ்! அவரது முயற்சியால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சட்டம் இயற்றப்பட்டது. ஓபிஎஸ்சின் முயற்சியால் இது நடந்ததால் ஜல்லிக்கட்டு நாயகர் என அவர் அழைக்கப்படுகிறார்.
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. துரைமுருகன் அங்கு வந்தால் அவர் பார்ப்பதற்கும், அவர் மாடு பிடிப்பதாக இருந்தால் அதற்கும் ஏற்பாடு செய்து தருகிறோம்'' என்று விஜய்பாஸ்கர் சொல்ல, மீண்டும் சிரிப்பலையில் நனைந்தது சட்டப்பேரவை!