அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விமர்சிக்கும் ஒலிப்பதிவு திங்கள்கிழமை வெளியானது. இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தங்க தமிழ்செல்வன் கூறும்போது, கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். சில விசயங்களை மாற்ற வேண்டும். சரி செய்ய வேண்டும் என்று சொன்னேன். எனது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டியதுதானே. என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? இதற்கு மேல் இதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
இந்த நிலையில் தேனி கர்ணன் கூறுகையில், அமமுக தோல்வி பற்றி தங்க தமிழ்ச்செல்வன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அமமுகவை மக்கள் ஏற்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்கும் என்றார். இதனால் அமமுக ஐ.டி. பிரிவினர் தங்க தமிழ்ச்செல்வனை தரக்குறைவாக விமர்சித்திருக்கின்றனர். அதனால்தான் தங்க தமிழ்ச்செல்வன் போன் போட்டு பேசியுள்ளார்.
அமமுக உருவாக காரணம் யார் தெரியுமா? தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி, செந்தில்பாலாஜி போன்றவர்கள்தான். இவர்களெல்லாம் தங்களது சொந்தப் பணத்தை போட்டு இந்த கட்சியில் இருந்தனர். இன்னும் ஒரு ரூபாய் கூட டிடிவி தினகரன் போடவில்லை. நான் தங்க தமிழ்ச்செல்வன் பின்னால் இருந்தவன். நான் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டேன். அப்போது நான் சொன்னேன் இந்த கூடாராம் காலியாகும் என்றேன். அதைப்போலவே காலியாகிவிட்டது.
எங்கள் தளபதிதான் தங்க தமிழ்செல்வன். நான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன். சந்தோஷமாக எங்கள் கட்சியான அண்ணா திராவிடர் கழகத்தில் இணைக்கப்போகிறோம். எங்கள் கட்சியின் திவாகரன், ஜெய்ஆனந்த் ஆகியோர் அவரை அழைக்க தயாராக இருக்கிறார்கள். சசிகலா வெளியே வரும்வரை எங்களுடன் இருப்பார்.
செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றார் என்றால், அவரது தாய் கழகம் திமுக. அதனால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அதிமுகவில் பயணித்தவர்கள் யாரும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள். அவர்கள் அதிமுகவில் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அண்ணா திராவிடர் கழகத்திற்கு வரட்டும். சசிகலா வெளியே வரும் இருக்கட்டும். சசிகலா வெளியே வந்த பிறகு அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை ஏற்படும். அதன்பிறகு தினகரன் தனிமரமாவார் என்றார்.