சென்னையில் உள்ள அமமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமமுகவை தேர்தல் ஆணையத்தில் முறையான பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்படுவதற்காக கட்சியின் சட்டத்திருத்தங்கள் உருவாக்கப்பட்டன. கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆலோசனைகளும் நடந்தன.
கட்சியினுடைய சட்ட விதிகள் உருவாக்கப்பட்டு இன்னும் இரண்டு வாரத்திற்குள் தேர்தல் ஆணையத்தில் கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்குரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவராக சசிகலாவை கொண்டு வரலாமா என்ற ஆலோசனையும் நடந்ததுள்ளது. ஆனால் சசிகலாவின் ஆலோசனைப்படி இதனை செய்கிறாரா, இல்லை தன்னிச்சையாக இதனை செய்கிறாரா என்ற சர்ச்சையும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது, புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுவதையடுத்து, டிடிவி தினகரன் இனி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியாது. அதிமுகவின் உரிமை கோரும் வழக்கு தலைமை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கை சசிகலா தொடர்ந்து நடத்துவார் என அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.