கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து திடீர் திருப்பங்களைச் சந்தித்திருக்கிறது அங்குள்ள அரசியல் சூழல். தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்துடன் பா.ஜ.க.வின் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அவர் பொறுப்பேற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நாளை மாலை 4 மணிக்கே பெரும்பான்மையை நிரூபிக்க கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா அவசர அவசரமாக நியமிக்கப்பட்டார். அவரது இந்த நியமனம் சட்டவிரோதமானது என்றும், உடனடியாக இந்த நியமனத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த கே.ஜி.போபையா?
இளமைக் காலத்தில் இருந்தே சங்பரிவார் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் இவர். 1990ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் கர்நாடக மாநில தலைவராக பொறுப்பேற்ற இவர், 2004 மற்றும் 2008 ஆகிய இரண்டு சட்டசபைத் தேர்தல்களில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எடியூரப்பாவின் தீவிர விசுவாசியாகவும் இவர் இருந்ததாக விமர்சனங்கள் உண்டு.
இந்த விமர்சனம் உண்மையானது!
2011ஆம் ஆண்டு சுரங்க ஊழல் நடைபெற்றபோது, பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மற்றும் 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், அச்சமயம் கர்நாடக சட்டசபையில் சபாநாயகராக பொறுப்பில் இருந்த போபையா, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அத்தனை பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். போபையாவின் இந்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. சபாநாயகர் போபையாவின் இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமானது மற்றும் அவசரகதியில் இருக்கிறது எனக்கூறி அதை நிராகரித்து தீர்ப்பளித்தது.
ஏன் சர்ச்சை?
சபாநாயகராக செயல்பட்டபோது மேற்கொண்ட நடவடிக்கையால் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஒருவர், மீண்டும் சபாநாயகராக ஆக்கப்பட்டால் சர்ச்சைகள் எழத்தானே செய்யும். அதேசமயம், 8 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஆர்.வி.தேஷ்பாண்டே மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் உமேஷ் கர்தி ஆகியோர் இருக்கும்போது, சர்ச்சைக்குரிய ஒருவர் சபாநாயகராக பொறுப்பேற்றிருப்பது மேலும் சர்ச்சையைக் கூட்டியிருக்கிறது.