சென்னையில் இபிஎஸ் ஆதரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் மண்டல ஐஜி பொறுப்பாக இல்லை. அந்த மாவட்டத்திற்கு சி.எம்மாக செந்தில் பாலாஜி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எஸ்.பி மற்றும் கலெக்டரை கையில் வைத்துக்கொண்டு அவர் செய்யும் அராஜக செயல்கள் கரூர் மாவட்டத்தில் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.
குறிப்பாக, அதிமுக மீது பொய் வழக்குகள் போட வேண்டும். அதன் மூலம் கழகத்தை அழிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஜனநாயகப் படுகொலை தான் கரூர் மாவட்டத்தில் நடந்து கொண்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் தேர்தல் பலமுறை தள்ளி வைக்கப்பட்டு மீண்டும் கடந்த 19 ஆம் தேதியில் நடைபெற இருந்த சூழலில் அதிமுகவைச் சார்ந்த திரு.வி.க என்பவர் காரில் செல்லும் போது, கார் மீது ஆசிட் வீசுகின்றனர்.
உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தி அவர்கள் கடத்தப்படும் அராஜகத்தை அரங்கேற்றியது ஜனநாயகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனித்தனியாக அடையாளம் காட்டுகிறார். ஆனாலும் அவர்கள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்யவில்லை. கைது செய்யவில்லை. ஆனால், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 21 ஆம் தேதி மாவட்ட அதிமுக ஐ.டி விங்கை சேர்ந்த சிவராஜ் மீதும் தாக்குதல் நடத்தினர். அவரும் அடித்த ஆட்களை அடையாளம் காட்டினார். ஆனாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தப்பட்டு அடி வாங்கிய அவர் மீதே வழக்குப் பதிந்துள்ளார்கள். நேற்று சிவராஜை அடித்தவர் வீடியோவை வெளியிடுகிறார். அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள். இந்த வார்த்தைகளை நாங்கள் உபயோகிக்க மாட்டோமா? செந்தில் பாலாஜி அதிகாரத்தில் இருந்து கொண்டு ஆடலாம். தேர்தல் வரும். ஆட்சி மாற்றம்; அரசியல் மாற்றம் வரும். அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டி வரும்.
தாக்குதல் நடத்தியவரே அந்த வீடியோவை வெளியிடுகிறார் என்றால், இதன் மூலம் அரசை ஏதாவது குறை கூறினால் இதுதான் நடக்கும் எனச் சொல்ல வருகிறார். நாட்டில் போலீஸ் இல்லையா? எஸ்.பி சுந்தர்ராஜன் என்ன செய்கிறார்? எஸ்.பி இல்லாத ஆட்டம் ஆடுகிறார்... எஸ்.பிக்கும் இருக்கிறது... அரசு மாறியதும் எஸ்.பிக்கு அந்த நிலை வரும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். காலம் மாறும் கண்ணா... அந்த நேரத்தில் அனைவரும் பதில் சொல்லுவீர்கள். சட்டம் ஒழுங்கு இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்பதற்கு இது அடையாளம்” எனக் காட்டமாகப் பேசினார்.