கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இன்று தற்பொழுது மீண்டும் அந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து 5 வது நாளாக நடைபெற்ற விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தொடர்ந்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் எப்படி கட்சியை நிர்வகிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.