உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய ஆதரவாளர் தஜிந்தர் சிங் பிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே இவர் பாஜவில் இணைந்துள்ளார். ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பதவி வகித்து வந்த தஜிந்தர் சிங் நேற்று (20.04.2024) தனது ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தவுத்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்தது குறித்து தஜிந்தர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கடந்த 35 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். இன்று அக்கட்சியில் இருந்து விலகிவிட்டேன். யாருக்கு எதிராகவும் நான் பேச விரும்பவில்லை. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, நான் பாஜகவில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.