நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வரலாற்றுச் சாதனை படைத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகள் பெருவாரியான நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
அதன் அடிப்படையில்தான் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு 11 வார்டுகளை ஒதுக்கியதுபோக, 37 வார்டுகளில் போட்டியிட்டது. எதிர்க் கட்சியான அதிமுக 48 வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கியது.
இருந்தாலும் கடந்த 10 மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் எடுத்துக் கூறியதோடு மட்டுமல்லாமல் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நகர மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்ததையும் எடுத்துக்கூறி வாக்காள மக்களிடம் திமுகவினர் வாக்கு சேகரித்தனர். அதன் விளைவாக திமுக 37 வார்டுகளில் அதிமுகவை எதிர்த்து நேரடியாகக் களம் இறங்கிய 30 வார்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றதோடு, திமுக கூட்டணிக் கட்சிகளும் 7 வார்டுகளை கைப்பற்றியது. ஆனால், எதிர்க் கட்சியான அதிமுக போட்டியிட்ட 48 வார்டுகளில், முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மகன்ராஜ் மோகன் உள்பட 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இதில் பெரும்பாலான அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. அதோடு பாஜக ஒரு வார்டையும், சுயேச்சைகள் 5 வார்டுகளையும் கைப்பற்றியது. அதன்பின் ஐந்து வார்டுகளில் வெற்றி பெற்ற சுயேச்சை கவுன்சிலர்கள் வெங்கடேஷ், மார்த்தாண்டன், விமலா, ஆரோக்கியமேரி, வசந்தி ஆகிய ஐந்து மாநகர கவுன்சிலர்களும் திமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாகக்கூறி அமைச்சர் ஐ. பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதன்மூலம் திமுக கூட்டணி பலத்துடன் 42 வார்டுகளை தன் வசமாக்கி அதிகப் பெரும்பான்மையுடன் திண்டுக்கல் மாநகராட்சியைப் பிடித்துள்ளது. மாநகராட்சி மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், முதல் பெண் மேயர் யார் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தலுக்கு முன்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் மேயர் குறித்து திமுகவினர் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் முடிந்த பிறகு யார் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறி இருந்தார். அதேபோல், தேர்தல் முடிவுகளுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கட்சியில் உழைத்தவர்களை மதித்து திமுக அவர்களுக்கு உரியப் பொறுப்புகளை வழங்கும். திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார்? என்பதை தலைமை தான் முடிவு செய்யும்” என்று தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அனைத்து திமுக பெண் வேட்பாளர்களும் களத்தில் இறங்கியிருந்தனர். இதில் 20 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதின் மூலம் மேயர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வருவதாக திமுகவினர் மத்தியில் பேச்சுகள் எழுந்துவருகின்றன.
இதில் 30வது வார்டு லட்சுமி, 6வது வார்டு சரண்யா, 3வது வார்டு இந்திராணி, 20வது வார்டு ஜெயந்தி, 23வது வார்டு இளமதி, 19-வார்டு ஆரோக்கிய செல்வி, 13வது வார்டு அருள்வாணி, 9வது வார்டு சாந்தி, 5வது வார்டு சுவாதி, 43வது வார்டு விஜயா, 37வது வார்டு நித்யா, 29வது வார்டு மனோரஞ்சிதம் உள்பட சில கவுன்சிலர்களும் மேயர் ரேஸில் இருந்து வருகிறார்கள். இருந்தாலும் அமைச்சர் ஐ பெரியசாமியின் ஆசி யாருக்கு? இருக்கிறதோ அவர்கள்தான் முதல் பெண் மேயராக இருக்கிறார்கள்.
மாநகர செயலாளராக இருக்கக்கூடிய ராஜப்பா 32வது வார்டில் போட்டியிட்டு மாநகர கவுன்சிலராக வெற்றி பெற்றார். அதன்மூலம் மாநகராட்சியின் துணை மேயர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் 7வது வார்டில் வெற்றி பெற்ற மாநகர கவுன்சிலர் சுபாஷ் மற்றும் 39வது வார்டு மாநகர கவுன்சிலராக வெற்றி பெற்ற பிலால்உசேன். 17வது வார்டில் சுயேச்சையாக வெற்றி பெற்று அமைச்சர் ஐ.பி.முன்னிலையில் திமுகவில் சேர்ந்த மாநகர கவுன்சிலர் வெங்கடேஷ் ஆகியோர் பெயரும் அடிபட்டு வருகிறது. இப்படி திண்டுக்கல் மாநகர கவுன்சிலராக வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களில் பலர் மேயர் ரேஸிலும். ஆண் மாநகர கவுன்சிலர்கள் சிலர் துணை மேயர் ரேஸிலும் இருந்து வருகிறார்கள்.