நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுகவும், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் தொடர்ந்து பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. பாஜக கூட்டணியில் பாமக, தான் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.அதன்படி, அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்,காஞ்சிபுரம்- ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாமகவில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாமக தலைமை சார்பில் கோரிக்கை வைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 'தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனைவரும் அவர்களின் தொகுதிகளில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் கட்சி சாராத முக்கிய பிரமுகர்களையும் பிரபலங்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவதுடன் அவர்களின் ஆதரவையும் கேட்டுப் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி இருக்கிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.