ஓபிஎஸ் தாயாரின் மறைவின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உடன் இருந்த கணத்தை அவரது ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் வயது முதிர்வு காரணமாக ஓரிரு தினங்கள் முன் காலமானார். நேற்று முன் தினம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி காசி கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தேனி பெரிய குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓபிஎஸ் தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி இருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, “ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் இறப்பதற்கு முதல் நாள் என நினைக்கிறேன், மதியம் ஓபிஎஸ் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அப்பொழுது தீர்ப்பு வந்தது அவருக்கு தெரியும். பேசிக்கொண்டு இருக்கும் போதே கண் கலங்கினார். காரணம் கேட்டபோது, ‘அம்மாவுக்கு நினைவு தப்பிவிட்டது என்னையும் பிறரையும் அடையாளம் காண முடியவில்லை’ என்றார். இந்த நேரத்தில் ஏன் விட்டுவிட்டு வந்தீர்கள் என கேட்டோம். ‘இந்த நேரத்தில் வரவில்லை என்றால் பன்னீர்செல்வம் பயந்துவிட்டார் என சொல்லுவார்கள்’ என்றார். அப்பொழுதே அவரது மனம் சங்கடப்பட்டது. திருச்சி வந்து இறங்கிய போது அவரது தாய் இயற்கை எய்திவிட்டார் என செய்தி வந்தது.
யாரோ ஒரு நிருபர் கேட்ட பின் பழனிசாமி இதற்கு வருத்தம் தெரிவிக்கிறார். முன்னாள் முதல்வரின் தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்த பின்னும் தன் மனநிலையை காரணம் காட்டி சர்வாதிகார போக்கில் அதை எடுத்துச் செல்லும் நபரை என் வாழ்நாளில் நான் பார்த்தது இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் எது சொன்னாலும் 100% சரியாகத்தான் இருக்கும். அவர்தான் தற்போது பாஜகவை நம்பி பயன் இல்லை என்கிறார். அதைத்தான் நீங்களும் பார்க்கிறீர்கள். மிகப் பெரிய பேரிழப்பில் இருக்கிறோம். இது முடியட்டும். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை பார்ப்பீர்கள்” என்றார்.