இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் ரா. அர்ஜுனமூர்த்தி தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழக பாஜக கட்சியில் அறிவு சார் பிரிவின் மாநில தலைவராக செயல் பட்டவர் ரா.அர்ஜுனமூர்த்தி. பாஜகவில் இருந்த அர்ஜுனமூர்த்தி ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ளார் என்ற பேச்சுவார்த்தை தொடர்ந்த நிலையில் பாஜகவில் இருந்து பிரிந்து ரஜினியுடன் இணைந்தார். ஆனால் கட்சி தொடங்காமல் ரஜினிகாந்த் பின் வாங்கிய நிலையில் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். இதற்கிடையே இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவுடன் இணைந்தார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "அர்ஜுனமூர்த்தி இன்று பாஜகவுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். இதற்கு முன் பாஜகவில் பயணம் செய்தவர். கட்சியின் அறிவுசார் பிரிவில் மாநில தலைவராக இருந்தவர். பாரதிய ஜனதாவின் கொள்கையை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் அவர்களுக்கு முழு அனுமதி இருக்கிறது. குறுகிய மனப்பான்மை எப்பொழுதும் பாரதிய ஜனதாவுக்கு கிடையாது. நம்முடைய சித்தாந்தம் மற்றும் என்ன அரசியலில் யார் இருந்தாலும் அவர்கள் பாரதிய ஜனதாவுடன் இணைந்து பயணிக்க பாஜக எப்பொழுதும் விரும்பும். அர்ஜுனமூர்த்தி பாரதிய ஜனதாவில் இருந்து பிரிந்து சென்றாலும் மீண்டும் நம்முடன் இணைய வந்திருக்கிறார். அவரை மகிழ்ச்சியுடன் பாரதிய ஜனதா வரவேற்கிறது" என கூறினார் .
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜுனமூர்த்தி "பாரதிய ஜனதா கட்சியில் பதவிக்காக சேரவில்லை. இளைஞர்களுக்கு நமது அறிவை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன். ரஜினி அரசியல் பயணம் தொடங்கி இருந்தால் அதை தமிழகத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது.அதையும் தாண்டி ஆன்மிக அரசியல் இருந்தது. அதே போல் தற்போதும் ஆன்மிக அரசியலுக்காக பாஜகவில் இணைத்துள்ளேன்" என்று கூறினார்.