தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று முன் தினம் (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்றும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தது. இன்று (17-01-24) காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.
அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் நேற்று முன் தினமும் (15-01-24), பாலமேடு பகுதியில் நேற்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அலங்காநல்லூர் பகுதியில் இன்று (17-01-24) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், “சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள் சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களுடன் ஒப்பிட்டு உவமைப்படுத்தப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வாழ்க்கை இப்படியிருக்க, அதனை வேறுவிதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் காட்டமாக பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். ‘தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்’ என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். உலகம் அதிர உரக்கச்சொல்வோம்..கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை “தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்” என்று பதிவிட்டுள்ளார்.