நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய உள்துறை அமித்ஷா பேசியது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று (19.12.2024) போராட்டம் நடத்தினர்.
அதே சமயம் பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தனது மண்டை உடைந்ததாக பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம் சாட்டியுள்ளார். பின்பு அவர் ஆர்.எம்.எல். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசியபிரதாப் சாரங்கி, "ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை கடுமையாக இடித்துத் தள்ளினார். அந்த எம்.பி. என் மீது விழ, நான் கீழே விழுந்தேன்" என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கார்கே, “அவையில் பேசும்போது பாஜகவினர் கடவுளோடு ஒப்பிடுவதாக நினைத்துக்கொண்டு மதிப்புக்குரிய தலைவர்களை பற்றி பேசுவது தவறானது. அந்த வகையில் அம்பேத்கரை அவமானப்படுத்தும் வகையில் அவர்கள் பேசினார்கள். அதற்கு எங்களின் கண்டனம். அமித்ஷா தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அவரது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். ஊர்வலமாக வந்து அவைக்குள் செல்ல முயன்றபோது பாஜகவினர் உள்ளே இருந்து வந்து எங்களை தடுத்தனர். எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க பாஜகவிற்கு எந்தவித அதிகாரமும் இல்லை. அவையை நடத்துவதில் பாஜகவிற்கு விருப்பமில்லை. ஜனநாயகத்தின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றார்.
இந்த நிலையில் இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த திசைதிருப்பல்கள், குழப்பங்கள், தள்ளுமுள்ளுகள் எல்லாம் இந்த உலகிற்கு ஏற்கனவே ஹிட்லர் நடத்திக் காட்டியவைகள் தான். உங்கள் நெஞ்சில் ஹிட்லர் இருக்கிறார். எங்கள் நெஞ்சில் அண்ணல் இருக்கிறார். நாடெங்கும் எதிரொலிக்க உரக்க முழங்கினோம் ‘அண்ணல் அம்பேத்கர் புகழ் ஓங்குக’” எனக் குறிப்பிட்டுள்ளார்.