மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெறவுள்ளதால் அதிமுக நிர்வாகிகள் மாநாட்டுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே ரிக்ஷா பேரணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். அண்ணாமலை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அவ்வளவுதான். எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரிந்ததால் தான், அவரை அழைத்து கூட்டணி கட்சியின் கூட்டத்தில் மோடி தன் பக்கத்தில் அமர வைத்திருந்தார். ஆனால், அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை” என்று பேசியிருந்தார்.
இதையடுத்து ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மேற்கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செல்லூர் ராஜூவின் பேட்டி குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “சில பேர் அரசியல் விஞ்ஞானியாக தன்னை நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லித் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை” என்று சாடினார்.
அதைத் தொடர்ந்து நேற்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லாருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டிலேயே மாநிலத் தலைவர் பொறுப்பை பெற்றிருக்கிறார். ஆனால், நான் அப்படி அல்ல.
நான் ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆனேன். அதே போல், மக்கள் பதவியில் கவுன்சிலர், மாநகராட்சித் தலைவர், அதன் பின் அமைச்சர் ஆனேன். இன்றைக்கு அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு அனைத்து பதவிகளும் படிப்படியாகத் தான் வந்தது. அதனால், என்னைப் பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்தவே இல்லை. நீங்களும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், எங்கள் மீது துரும்பு எரிந்தால் பதிலுக்கு நாங்கள் இரும்பை வீசுவோம். தமிழகத்தில் தங்களுக்கான இடம் என்ன என்பதனை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்” என்று பேசினார்.
அதேபோல் நேற்று, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.மு.க.வை தொட்டால் கெட்டார்; என்று அண்ணாமலைக்கு தெரியும். இது போன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அண்ணாமலையின் பொறுப்பு. அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி, செல்லூர் ராஜூவாக இருந்தாலும் சரி, அவர்களை விமர்சனம் செய்தால் நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம். எங்கள் கட்சியினரை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும். அண்ணாமலை கண்டிப்பாக அந்த நிலையை ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி அந்த நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது” என்று தெரிவித்தார்.
அதே போல், இந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க தான் என்று அண்ணாமலை சொல்கிறார். 2 பேர் இருந்தாலே நாங்கள் பிரதான எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளலாம். அதனால், அண்ணாமலையின் கற்பனைக்கு எல்லை இல்லை. ஆசைக்கும் எல்லை இல்லை. கற்பனை செய்வது வேறு, நடைமுறை சாத்தியம் வேறு. பிரதமராக வரவேண்டும் என எல்லாருக்கும் ஆசை இருக்கும். அதே போல், அண்ணாமலைக்கும் ஆசை வரலாம். அ.தி.மு.க.வின் பலம் மிகப்பெரிய பலம்.
பா.ஜ.க.வுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டு இல்லை, இஸ்லாமியர்களின் ஒட்டு இல்லை, கிறிஸ்தவர்கள் ஓட்டு இல்லை, தலித் கிறிஸ்தவர்கள் ஓட்டு இல்லை, ஏழை எளியோர் மக்களின் ஓட்டும் இல்லை. நதிநீரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஓட்டு இல்லை. மொழி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் இந்தியை ஆதரிக்கும் பா.ஜ.க.வுக்கு இடமில்லை. அவர்களுக்கு மக்கள் தீர்ப்பு சொல்வார்கள்” என்று கூறினார்.