
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மத்திய பா.ஜ.க அரசின் கனவுத் திட்டம் ஆகும். அந்த திட்டத்தை அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க அரசு தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 12ஆம் தேதி (12.12.2024) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா டிசம்பர் 16ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று (17.12.2024) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதே சமயம் இந்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒரே தேர்தல்...மக்களவையே முன்மாதிரி; மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது.
மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர். ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
ஒரே தேர்தல் …
மக்களவையே முன்மாதிரி !
மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது.
மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.
ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே… pic.twitter.com/gyOvq2h8qz— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 17, 2024