நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டிவருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. அதிமுக ஏற்கனவே தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சியில் கடும் போட்டியும் நிலவிவருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் சொந்த ஊரான வத்தலக்குண்டு பேரூராட்சியில் தலைவர் வேட்பாளர் யார் என்பதில் அமைச்சரின் உறவினர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உறவுகளான திமுக நகரச் செயலாளர் சின்னதுரை மற்றும் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கனகதுரை, தீவிர விசுவாசிகளான பத்திர எழுத்தர் பா. சிதம்பரம், கூட்டுறவு நகர வங்கித் தலைவர் ரிலாக்ஸ் கணேசன் உள்ளிட்ட சிலரும் சீட்டு வாங்குவதில் மும்முரம் காட்டிவருகின்றனர்.
அமைச்சரின் கடைக்கண் பார்வை விசுவாசிகளின் பக்கமே தற்போதுவரை இருக்கும் நிலையில், எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவில் ஒன் மேன் ஆர்மியாக அக்கட்சியின் நகரச் செயலாளர் பீர்முகமது களமிறங்குகிறார். 10 ஆண்டுகளாக சேர்த்துவைத்த அனைத்தையும் வாரி இறைக்கத் தயாராக இருக்கும் பீர்முகமதுவை கட்சித் தலைமை அறிவிக்க வேண்டியது ஒன்று மட்டுமே பாக்கி. மும்முனைப் போட்டியாக மக்கள் நீதி மய்யம் ஒன்றியச் செயலாளர் மனோ தீபன் தலைமையில் வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளைத் தேர்ந்தெடுத்து அக்கட்சியினர் போட்டியிட தயாராகிவருகின்றனர்.
இதேபோல் நிலக்கோட்டையில் பேரூராட்சி நிர்வாகம் தற்போதுவரை அதிமுக எம்.எல்.ஏ., தேன்மொழியின் கணவர் சேகர் கட்டுப்பாட்டில் இருந்துவரும் நிலையில், இங்கு அதிமுகவை எதிர்த்துதான் திமுக போட்டியிட உள்ளது. நிலக்கோட்டை திமுகவின் நகரத் துணைச் செயலாளர்கள் ஜோசப் கோவில் பிள்ளை, முருகேசன் ஆகிய இருவரில் ஒருவர் சீட் பெற்றுவிடுவதில் முனைப்பு காட்டுகின்றனர்.
நகரச் செயலாளர் கதிரேசன் பழம் எனக்குத்தான் என களத்தில் உள்ளார். இப்படி திமுகவினருக்கு இடையே கடும் போட்டி இருந்தாலும்கூட, இந்தமுறை நிலக்கோட்டை பேரூராட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி தீவிரம் காட்டிவருகிறார். அதிமுகவைப் பொறுத்தவரை ஒரு வீட்டில் இரண்டு பதவியா என கலகக் குரல் கட்சியில் கேட்கும் நிலையில், அதனை சமாளிக்க சேகர் தனது நிழலாக இருக்கும் முத்துவை களமிறக்க ஏற்பாடு செய்துவருகிறார்.
அதுபோல், அம்மைய நாயக்கனூர் பேரூராட்சியில் திமுக நகரச் செயலாளர் செல்வராஜ், அதிமுக நகரச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் மட்டுமே நேரடியாக களமிறங்குகின்றனர். இருந்தாலும், திமுக மாவட்ட துணைச் செயலாளரும் ஐ. பெரியசாமியின் தீவிர விசுவாசியுமான நாகராஜன், இந்தத் தேர்தலில் தனது மகன் விமல்குமாரை களமிறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சரிடம் காய் நகர்த்திவருகிறார். இதுபோல் சேவுகம்பட்டி பேரூராட்சியில் திமுக நகரச் செயலாளர் தங்கராஜ், அதிமுக நகரச் செயலாளர் மாசாணம் ஆகியோர் களம் காண தயாராகிவருகின்றனர். இதேபோல் பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் திமுக நகரச் செயலாளர் அருண்குமார், அதிமுக நகரச் செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் களம் காண தயாராகி வருகின்றனர்.
இப்படி நிலக்கோட்டை தொகுதியில் உள்ள 5 பேரூராட்சிகளிலும் இப்போதே அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதேபோல், எதிர்க்கட்சிகளைவிட ஆளும்கட்சியில் உள்ளவர்களுக்கு இடையேதான் சீட்டுக்கான மல்லுகட்டும் தொடங்கியிருக்கிறது.