வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள சோழபுரம் கடைவீதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறித்து முதல்வர் பழனிச்சாமி ஏன் வாய் திறக்கவில்லை. இதற்கு முதல்வர் உடனடியாக பதில்கூற வேண்டும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இந்தியாவில் 11க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இத்திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் அமல்படுத்தபடாது என முதல்வர் அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேர் விடுதலையை கால தாமதப்படுத்தக்கூடாது. தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும், ஆளுநர் அதற்கு பதில் கூறாமல் உள்ளார். அமைச்சரவை தீர்மானத்துக்கு ஆளுநர் செவிசாய்க்கவேண்டும். ஏழு பேர் விடுதலைக்கு கவர்னர் செவிசாய்க்காவிட்டால் தமிழக அரசு ஆளுனரை திரும்பப்பெற மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். பாஜக ஆட்சியால் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டது" என்றார்.