
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் சிப்காட் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்காக, சூளகிரி அருகே உள்ள அயரனப்பள்ளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் மூவாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 01- ஆம் தேதியான இன்று, தனியொருவராக, கே.பி. முனுசாமி போராட்டக் களத்தில் குதித்துள்ளார்.
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.-வுமான கே.பி.முனுசாமி, சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தனிநபராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இது ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் என்றபோதும், இவர் மட்டுமே மேடையில் இருந்தது பலரையும் வியப்பில் தள்ளியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்துள்ளனர். பிறகு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கே.பி.முனுசாமி தன்னுடைய 57 ஏக்கர் நிலத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஓசூர் எம்.எல்ஏ விமர்சித்துள்ளார். கே.பி.முனுசாமியின் இந்த போராட்டம் குறித்து ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, ''சிப்காட் அமைவுள்ள அந்த இடத்தில் கே.பி.முனுசாமிக்கு 57 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை காப்பாற்றுவதற்காக அவர் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளார். கே.பி.முனுசாமியின் நாடகம் மக்களிடம் எடுபடாது. 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டு சிப்காட் அமைக்க முடிவு செய்ததே இபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசுதான்'' என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கே.பி.முனுசாமி நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்ட மேடையில் இடம்பெற்றிருந்த பதாகையில் 'பறிக்காதே' என்ற வார்த்தைக்கு மாறாக 'பரிக்காதே' என பிழையாக வாசகம் இடம்பெற்றிருந்தது சமூகவலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.