புதுவையில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தில் அனைத்து வகையான பதிவேடுகளும் இனி இந்தி மொழியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று அதன் நிறுவனர் கடந்த 29-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதுவை ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தில் அனைத்து வகையான பதிவேடுகளும் இனி இந்தி மொழியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்ற அறிவிப்பு இந்திய அலுவல் மொழி சட்டத்திற்கு எதிரானது ஆகும். இது அப்பட்டமாக இந்தித் திணிப்பு என்பதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்தியில் மட்டுமே பதிவேடுகள் என்ற சுற்றறிக்கை அங்கு பணியாற்றும் இந்தி பேசாத பணியாளர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவுக்கும் காரணமாக ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; பதிவேடுகளை பராமரிப்பதில் முன்பிருந்தே நிலையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி ஜிப்மர் மருத்துவ நிறுவனம் முன் நாளை மறுநாள் (11.05.2022) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் புதுவை அமைப்பாளர் கணபதி தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் அனைத்து நிலை பா.ம.க.வினர் பங்கேற்பார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.