
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜகவின் தேசிய செயற்குழுவுக்கான சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை குஷ்பூ, ஹெச். ராஜா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை நேற்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, “பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. நான் இந்த அறிவிப்பு வரும்போது ஐதராபாத்தில் இருந்தேன். அனைவரும் போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போதுதான், தேசிய செயற்குழுவுக்கான சிறப்பு அழைப்பாளராக என்னை நியமித்திருப்பது தெரிந்தது” என்றார். தொடர்ந்து பத்திரிகையாளர்கள், “தமிழ்நாடு அரசு கரோனாவை கையாளும் விதத்தை எப்படி பார்க்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர், “ஆறு மாதம் ஆகட்டும். ஆறு மாதம் அவர்களுக்கு தேன்நிலவு காலம். மே தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆறு மாதம் முடிந்த பிறகு பேசலாம்” என்று தெரிவித்தார்.