சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் முன்னாள் தமிழக முதல்வர் பழனிச்சாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி 27 அமாவாசைக்குள் மாறும் எனக் கூறுகிறார். சினிமா படம் தான் நினைவுக்கு வருகிறது. அமாவாசை என்றால் பழனிசாமிக்குத் தான் மிகவும் பொருந்தும். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி எதிர்த்து நின்றபோது, இன்றைய முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்திருக்கலாம். ஆனால், அதனை விரும்பவில்லை. தேர்தல் மூலம் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்போம் எனக்கூறித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளார். இதனை மறந்து மக்களை திசைதிருப்ப, அமாவாசை கதைபேசும் அமாவாசை பழனிசாமிக்கு கண்டனம்.
மேற்கு வங்கம்போல் சட்டசபையை முடக்குவோம் எனக் கூறுவது பழனிசாமி சர்வாதிகார பேச்சைக் காட்டுகிறது. தமிழக ஆளுநர் என்ன தலையாட்டி பொம்மையா? இவருக்கு சட்டமன்றத்தை முடக்கப் போவதாக எப்போது கூறினார் புரியவில்லை. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சொல்லி வரும் ஒரே நாடு, ஒரே தேர்தல், என்பது சாத்தியமில்லை, ஒரே ஜெயில் என்பது தான் சாத்தியமான ஒன்று.
தேர்தல் பரப்புரையில் இதுவரை ஒ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன சேவை செய்ய போகிறோம் எனச் சொன்னது உண்டா. 2021 உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றியது என்ன ஆயிற்று.
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி இல்லை. தேசிய முற்போக்கு கூட்டணி தொடர்கிறது. தேர்தல்களில் கூட்டணி உண்டு என பாஜக தலைவர் அண்ணாமலையும், பழனிசாமியும் கூறுவது அ.தி.மு.க. அடிமை சாசனத்தை உறுதி செய்கிறது.
பழனிசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக, கோடிக் கணக்கில் பல வகைகளில் செலவு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் போட்டியிடும் சாதாரண அடிமட்ட தொண்டருக்குச் செலவு செய்யாதது ஏன்? தி.மு.க. அரசு மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும், மக்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஒரே வெறுப்பு தான் பழனிசாமி உள்ளிட்ட ஊழல்வாதிகளை இன்னும் கைது செய்யவில்லை என்கிற அதிருப்திதான் உள்ளது.
அனுதினமும் நாங்கள் போற்றி புகழ்பாடி வணங்கும் எம்.ஜி.ஆர் உருவத்தில் தெரிந்த ஒருவர், எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்ததை எடப்பாடி பழனிசாமி வரவேற்பது எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தும் செயல் அல்லவா. அதே நேரத்தில் தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர் பிறந்தநாளை அரசு விழாவாக எடுத்துள்ளார். மறைந்த நாவலருக்குச் சிலை கண்டுள்ளார். அம்மா கேண்டீன் தொடர உத்தரவிட்டுள்ளார். நீட் விஷயத்தில் அம்மாவை காட்டி எதிர்ப்பை பாராட்டிப் பேசி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவை அவமானப்படுத்தி வருகிறார்” என்று பேசினார்.