தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சித்திரைத் திருவிழாவில் மின்வெட்டு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதற்கு பதிலாக சூசகமாக, சித்திரைத் திருவிழாவில் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. செல்லூர் ராஜூவின் இந்த பேச்சுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க எழுந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டாம் என தடுத்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்துவிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அணில்களால் மின்தடை ஏற்படுவதாக, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.