பாரதிய ஜனதா கட்சி என்கிற ஆக்டோபஸ் அதிமுக என்ற ஆலமரத்தை வீழ்த்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் அடுத்த பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் திருச்சி மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் ஸாலாஹூத்தீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த உமர் பாரூக், “ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எங்கள் மாநில தலைவரைச் சந்தித்து ஆதரவு கேட்டதால் எஸ்டிபிஐ கட்சி எடுத்த முடிவின்படி இடைத் தேர்தலில் களம் இறங்கி பணியாற்றும். மத்திய பட்ஜெட் உப்பு புளி இல்லாத மக்கள் நலனின் அக்கறை இல்லாத பட்ஜெட் ஆக உள்ளது. அதானி இந்த நாட்டை சூறையாடியது. உலக அரங்கில் பிரதமர் மோடியை பற்றி குஜராத் கலவர வழக்கு மூலம் அவரைப் பற்றிய உண்மை தகவல் வெளிவந்து விட்டது. இந்த வேளையில் எதையாவது கூறி பட்ஜெட்டில் திசை திருப்ப நினைத்தும் அதில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது” என்றார்.
காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு பதிலாக பிபிசி ஆவணப்படம் வெளி வந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “காஷ்மீர் பைல்ஸ் கற்பனையான ஒரு திரைப்படம். ஆனால் பிபிசி வெளியிட்டுள்ளது உண்மைகளின் அடிப்படையில் வெளியிட்ட உள்ள ஒரு ஆவணம்” எனப் பதிலளித்தார்.
மேலும், “அதிமுகவை பற்றி குறிப்பிடும் போது எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட அந்த ஆலமரமாகிய அதிமுகவை பிஜேபி என்கிற ஆக்டோபஸ் வீழ்த்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பிஜேபியை விரும்பினாலும் அதிமுக தொண்டர்கள் பிஜேபியை விரும்ப மாட்டார்கள். இன்று அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் என நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஒரு பலமான கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எஸ்டிபிஐ கட்சியின் விருப்பம். எனவே ஓபிஎஸ், இபிஎஸ்ஸும் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.