கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதால் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ப.ரவீந்திரநாத் எம்.பி., வி.ப.ஜெயபிரதீப் உள்பட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.விலிருந்து ரவீந்திரநாத் எம்.பி.யை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. கட்சி சட்ட விதிகளின் படி எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது. அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, உதயகுமார், ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஆதிராஜாராம், ஜக்கையன், ராஜன் செல்லப்பா, தி.நகர் சத்தியா, விருகை ரவி, அசோக் கந்தன், இளங்கோவன் ஆகிய 22 பேர் நீக்கப்பட்டுள்ளனர்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ்-சின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், '' எடப்பாடி பழனிசாமி குண்டர்களை வைத்து பொதுக்குழு என்ற ஒன்றை நடத்திய காரணத்தால் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நீக்கினார். தொடர்ந்து தவறான வழியில் அதிமுகவின் பொறுப்பாளர்களாக இருப்பதைப் போல் காட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிமுகவை குழம்பும் வகையில் செயல்பட்ட 22 பேரை முதல்கட்டமாக கட்சியின் அடிப்படை பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளனர். இன்றைய தினம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொடநாடு வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தினசரி விசாரணைகள் நடந்தாலும் இதில் உண்மையான குற்றவாளி யார் என தெரிந்த பிறகு ராஜபக்சேவை இலங்கையிலே துரத்தியது போல் அதிமுக தொண்டர்கள் அடித்து முடுக்குவார்கள். அந்த காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். மூத்த உறுப்பினர் பொன்னையன் கூறியதைப்போல் ஜாதி கட்சியாக, மதக்கட்சியாக மாற்றிக்கொண்டு இன்று எடப்பாடியின் பின்னால் 9 எம்.எல்.ஏ என்கிறார். மற்ற எம்.எல்.ஏக்கள் எல்லாம் வியாபார ரீதியில் புரோக்கரை போல செயல்படுகிறார்கள். இந்த கேவலமான நிலையை ஓபிஎஸ் அடக்க வேண்டிய விதத்தில் செயல்பட்டு கட்சியை காப்பாற்றுவார். விரைவில் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்களோடு ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும்''என்றார்.
அப்பொழுது அருகிலிருந்த புகழேந்தி கையில் வைத்திருந்த செல்போனில் ராஜபக்சே போல் சித்தரிக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை காட்டி ''கோவை செல்வராஜ் சொன்னமாதிரி போட்டோ வந்திருக்கு பாருங்க'' என காட்டினார். அப்பொழுது அங்கிருந்தவர்கள் சர்வாதிகாரி, 23 ஆம் புலிகேசி என சொல்லி சிரித்தனர்.