Published on 27/06/2019 | Edited on 27/06/2019
சமீப காலமாக தினகரன், தங்க தமிழ்செல்வனின் மோதல் போக்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் திட்டுவது போல ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து இனிமேல் தினகரனின் அமமுக கட்சியில் இருக்கப்போவதில்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றனர். மேலும் அமமுகவில் நிர்வாகம் மொத்தமாக சரியில்லை. தினகரன் 'ஒன் மேன் ஆர்மி'யாக தன்னை நினைத்து செயல்படுவதால், பலர் வெளியே வந்துவிட்டனர். மீதி இருப்பவர்களும் வெகு விரைவில் வெளியேறி அந்தக் கட்சியின் கூடாரமே காலியாகி விடும் என்றார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ,தங்க தமிழ்ச்செல்வன், "இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சிறப்பாக தேர்தல் வியூகம் அமைத்தனர். அதிமுக தொண்டர்களை வழிநடத்துவதில் இருவருக்கும் ஒற்றுமை உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக அதிமுக அரசுக்கு பல தொல்லைகள் கொடுக்கப்பட்டது. ஆட்சியை கவிழ்க்க பல திட்டங்கள் போட்டனர். அதிமுகவை எதிர்த்து அனைத்து கட்சிகளுமே போராட்டம் நடத்தியது. எத்தனையோ வித்தைகளையும் போட்டு பார்த்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஆட்சியை கலைக்க எடுத்த முடிவுகள் அனைத்து முயற்சியுமே தோல்வி அடைந்தது. இது எதைக் காட்டுகிறது? இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் ஜெயித்து விட்டனர் என்று தானே அர்த்தம்?" என தெரிவித்துள்ளார்.