தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று பல அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''நிச்சயமாக அண்ணாவின் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக இணைந்து அதிமுகவை வெற்றிக்கு எடுத்துச்செல்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாக இணைந்து தேர்தலில் வெற்றிபெறும். போகும் இடங்களில் எல்லாம் மக்களே சொல்கிறார்கள் சொன்ன திட்டங்களை திமுக நிறைவேற்றவில்லை என்று. ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் இவர்கள் நிறுத்துவது நல்லதல்ல'' என்றார்.
ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைவு குறித்து கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, ''அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். எங்கள் தொண்டர்களின் வெளிப்பாடு அதுதான். பண்ருட்டி ராமச்சந்திரன் எங்கள் கட்சியின் முன்னோடி அவரை பார்த்திருப்பது தவறு இல்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளது. அதைப்பற்றி நாம் எதுவும் சொல்லக்கூடாது இல்லையா. அதிமுகவை என் தலைமையில் வழிநடத்த வாய்ப்புகள் இருக்கிறது ஏனென்றால் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்'' என்றார்.
அப்பொழுது மற்றொரு செய்தியாளர் 'எடப்பாடி, நான் பழைய எடப்பாடி கிடையாது என்று சொல்லியுள்ளாரே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த சசிகலா, ''அப்படியா... அது என்ன வித்தியாசம் என நீங்க தான் பார்த்து தெரிஞ்சுக்கணும். எனக்கு தெரில. நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு கண்டிப்பாக செல்வேன்'' என்றார்.