கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலாபுராகி மாவட்டத்தில் கடந்த 27 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி விஷமுள்ள பாம்பு போன்றவர். பாம்பு விஷமுடையதா இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம். அதை நக்கினால் நீங்கள் இறப்பீர்கள்” எனக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே தனது வார்த்தைகளுக்கு விளக்கம் அளித்தார். அதில், “நான் பிரதமர் மோடியை குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நான் குறிப்பிட்டது பாஜகவின் கொள்கைகளைத்தான். பாஜகவின் கொள்கைகளைத்தான் நான் பாம்பு என்றேன். நான் தனிப்பட்ட முறையில் மோடியை கூறவில்லை. பாஜகவின் கொள்கைகள் பாம்பு போன்றது. நீங்கள் அதைத் தொட முயன்றால் உங்களுக்கு மரணம் நிச்சயம்” என்று விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் பாஜக எம்எல்ஏவும், முன்னாள் மத்திய அமைச்சருமான பசனகவுடா பாட்டில் யத்னால், கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் யலபுர்காவில் பிரச்சாரத்தில் பேசும் போது, "பிரதமர் மோடியை உலக தலைவர் என்று மக்கள் கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட தலைவரை காங்கிரஸ் கட்சி விஷப் பாம்புக்கு எப்படி ஒப்பிட முடியும். இது போன்று பேசும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியின் இசைக்கு நடனமாடுபவர்களாக இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு விஷக்கன்னி. அவர் நாட்டை சீரழித்து விட்டார். சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் ஏஜென்டாக செயல்படுகிறார். டீ விற்றவர் நாட்டின் பிரதமராகி விட்டாரே என்ற காழ்ப்புணர்ச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மோடியை அவமானப்படுத்துகிறார்கள்" என்று பேசினார்.
பசனகவுடாவின் இந்த பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக கட்சி பசனகவுடாவை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில மேலிடத் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.