நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை மீண்டும் கடற்கரை சாலையில் நிறுவப்படவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பில், தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன். தி.மு.க சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவிடம் கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, 2021 ஆம் ஆண்டின் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை இணைத்துக் கொள்ளவேண்டுமென, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை மீண்டும் கடற்கரை சாலையில் நிறுவப்படவேண்டும்.
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு, அவர் மறைந்து பல ஆண்டுகளாகியும், தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரில், ஒரு சிலை அமைக்கப்படவில்லையே என்ற லட்சோபலட்சம் ரசிகர்களின் வேதனையைப் போக்கும் வகையில், 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து, சொன்னதைச் செய்வோம் என்பதை நிரூபிக்கும் வகையில், ஆட்சி அமைந்த 3 மாதங்களிலேயே, 2006 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் நாள் சென்னை, கடற்கரை, காமராஜர் சாலையில், நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டு, முதல்வர் கலைஞர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது, ஆனால், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, ஏதோ காரணங்களைக் கூறி அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டதுபோல, 2021 தேர்தலில் வெற்றிபெற்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியமைந்தவுடன், அகற்றப்பட்ட நடிகர்திலகம் சிவாஜி சிலை, சென்னை, கடற்கரை, காமராஜர் சாலையில், மகாத்மா காந்தி சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் நடுவில் அமைக்கப்படவேண்டும்.
நடிகர்திலகம் சிவாஜி பிறந்தநாள் “கலை வளர்ச்சி நாள்“ என அறிவித்து கொண்டாடப்பட வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் “கல்வி வளர்ச்சி“ நாளாக, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டு, பெருந்தலைவருக்குப் பெருமை சேர்க்கப்பட்டது. அதுபோல, தமிழினத்தின் மாபெரும் கலைஞனாக, பெருந்தலைவரின் சீடராக, இறுதிவரை வாழ்ந்து மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளான அக்டோபர் 1 ஆம் நாளை “கலை வளர்ச்சி நாளாக” அறிவித்து பெருமை சேர்க்கவேண்டும்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியைப் பெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், எங்களுடைய இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இவ்வாறு கூறியுள்ளார்.