ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இத்தகைய பரபரப்பான சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 6 ஆம் தேதி (06.09.2024)வெளியிட்டார். அதில், ஒவ்வொரு குடும்பத்தின் தலைவிக்கும் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க ‘மா சம்மன் யோஜனா’ திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ‘பிரகதி சிக்ஷா யோஜனா’ திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம். ஜம்முவில் சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜம்மு காஷ்மீர் பாஜகவுக்கு முக்கியமானது ஆகும். இந்த நிலத்தை இந்தியாவுடன் அப்படியே வைத்திருக்க நாங்கள் எப்போதும் முயற்சித்தோம். ஜம்மு காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. இது என்றும் அப்படியே இருக்கும் என்று பாஜக நம்புகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு வரை வரை ஜம்மு காஷ்மீர் எப்போதும் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் நிழலில் இருந்தது. முன்பு இந்த மாநிலத்தை நிலையற்றதாக வைத்திருந்தனர். ஜம்மு காஷ்மீரின் வரலாறு எழுதப்படும் போதெல்லாம், 2014க்குப் பிறகு இந்த பத்து ஆண்டுகள் மாநிலத்திற்கு ஒரு பொற்காலமாகக் குறிக்கப்படும். தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கையை நான் பார்த்தேன். காங்கிரஸும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கையை மௌனமாக ஆதரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். 370வது சட்டப்பிரிவு திரும்ப வராது (சிறப்பு அந்தஸ்து) என்பதை நாட்டுக்குச் சொல்ல விரும்புகிறேன். அதனை நடக்க விட மாட்டோம். 370வது பிரிவு இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களையும் கற்களையும் கொடுத்தது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (11.09.2024) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே பேசுகையில், “இரண்டு, மூன்று முறை அமித்ஷா ஜம்மு காஷ்மீருக்கு வந்து பொய் சொல்கிறார். அதாவது மோடி அனைவருக்கும் தலா ரூ.15 லட்சம் தருவார். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள் வழங்கப்படும். வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டு வருவோம் எனக் கூறினார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்படி பொய் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்தும் இத்தகையவர்கள் வெட்கப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீருக்குக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக, 1 லட்சம் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படும். குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும். ரூ. 25 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். சுயஉதவிக் குழுக்களில் செயல்படும் பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த ஜம்மு காஷ்மீர் தேர்தல். எனது 60 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில், எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றியதை நான் பார்த்ததில்லை. ஜம்மு-காஷ்மீரை எப்படிப் பின்னுக்குத் தள்ளினார்கள் என்பதை பாஜக விளக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்து உள்துறை அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். முன்னதாக அவர் தனது வாக்குறுதிகளை ‘தேர்தல் முழக்கம்’ என்று அழைத்தார். இன்று 5 லட்சம் வேலைகள் என்ற பாஜகவின் வாக்குறுதியும் பொய்யான தேர்தல் முழக்கம் ஆகும்.
ஜம்மு காஷ்மீரில் 1 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது மொத்த அரசுப்பணியிடங்களில் 63% பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை ஏன் இதுவரை பாஜக நிரப்பவில்லை?. மக்கள் பருப்பு, அரிசி சாப்பிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டோம். ஆனால் இங்கு ஜம்மு காஷ்மீரில் பாஜக மணல் சாப்பிட ஆரம்பித்துள்ளது. வெளியூர்களில் இருந்து ஆட்களை வரவழைத்து ஜம்மு காஷ்மீரில் மணல் ஒப்பந்தம் கொடுக்கிறார்கள். இதை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும். இங்குக் காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் வலுவாக இருப்பதால், பாஜக பதற்றமடைந்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தி மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? அவர்களுக்குப் பின்னால் யார் நிற்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.