'நீங்க மதுவிலக்குத் துறை அமைச்சரா அல்லது மது விற்பனை துறைக்கு அமைச்சரா' என பாமகவின் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பாமக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''அமைச்சருக்கு வருத்தம் வந்துவிட்டதாம். எந்த அமைச்சருக்கு தெரியுமா? மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமிக்கு வருத்தம் வந்துவிட்டதாம். என்ன வருத்தம் என்றால் காலையில் ஏழு மணிக்கு எல்லாம் கடை திறக்க வேண்டுமாம். ஏனென்றால் கட்டட வேலைக்கு போகிறவர்களுக்கு எல்லாம் 7 மணிக்கு எல்லாம் சாப்பிட்டால் தான் கட்டட வேலையை செய்ய முடியுமாம். முத்துசாமி அவர்களே நீங்கள் என்ன மதுவிலக்குத் துறை அமைச்சரா அல்லது மது விற்பனை துறை அமைச்சரா நீங்கள்? 180 மில்லி சரிவராதாம், 90 மில்லி கொடுத்தால் கரெக்டா இருக்குமாம்.
உங்களுடைய வேலையே மதுவை எப்படி கட்டுப்படுத்துவது; குறைப்பது; மதுவை எப்படி ஒழிப்பது; இளைஞர்களை காப்பாற்றுவது; பெண்களின் தாலியை காப்பாற்றுவது; தமிழ்நாட்டை முன்னேற்றுவது தான். ஆனால், எப்படி இன்னும் அதிகமாக; கூடுதலாக விற்கலாம்; எப்படி குடிப்பதை ஏதுவாக செய்யலாம் என்பது அமைச்சருடைய வேலை கிடையாது. ஹாஸ்பிடல்ல ஒருத்தர் இருக்காரு செந்தில் பாலாஜி. ஆபரேஷன் பண்ணி இருக்கிறார். சீக்கிரம் அவர் குணமடைய வேண்டும். பலமுறை சொல்லிவிட்டேன். அவரால் தான் திமுகவிற்கு கெட்ட பேர். கெட்ட பேரென்றால் சாதாரண கெட்ட பேர் இல்லை, பயங்கரமான கெட்ட பேர். இப்பொழுது முத்துசாமி வந்திருக்கிறார். அவர் கொஞ்சம் சமூக அக்கறை உள்ளவர் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது பார்த்தால் செந்தில் பாலாஜியை விட இன்னும் மோசமாக இருப்பார் போல'' என்றார்.