இந்த தேர்தல் தமிழகத்தின் அடையாளத்தையும், தமிழ் கலாசாரத்தையும் காப்பாற்றக்கூடிய தேர்தலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியப்பள்ளி மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் செவ்வாய்க்கிழமை காலை குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிம் பேசுகையில், “இந்த தேர்தல் தமிழகத்தின் அடையாளத்தை காப்பாற்றவும், தமிழ் கலாசாரம், தமிழர்களின் பெருமையையும் காப்பாற்றவும் நடைபெறக்கூடிய தேர்தலாகும். பாஜக, ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரங்கள் மக்களுடைய ஒற்றுமைக்கு விரோதமானது.
பாஜக வெளிப்படையாகவே சனாதன தர்மத்தை இந்தியாவிலே ஒத்துக்கொள்கிறது. அதற்காக அவரது கட்சி தலைவர் பேசுகிற போது பெரியாரிசத்தை அகற்றவே இங்கு பாஜக போராடுகிறது என கூறியுள்ளார். அதுமுற்றிலும் தவறு. பெரியார் அவர்கள் சமத்துவநீதிக்கு மக்களுடைய ஒற்றுமைக்காக மகாத்மாகாந்தியின் கொள்கைகளை ஏற்று சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர். இன்றைக்கு தமிழகத்தில் சமுக நீதி இருக்கிறது என்று சொன்னால் அந்த தூண்களை கட்டி எழுப்பியவர்களில் பெரியார் முதன்மையானவர். எனவே தேர்தல் வெற்றி, தோல்வி என்பது வேறு.
அதற்கு பதிலாக தமிழ் நாகரீகத்தை காப்பாற்ற இந்த தேர்தலில் இந்த கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். இந்த கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. நாங்கள் மையப்படுத்துவது தமிழகத்தின் வளர்ச்சி. 10 ஆண்டு காலம் அதிமுக ஆண்டுள்ளது. அவர்களால் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. ஆதலால் எங்களது கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள். எங்கள் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வராக இருப்பார். தமிழகத்தின் வளர்ச்சியை கொண்டு வரக்கூடிய முதல்வராக திகழ்வார்” என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.