தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்துவருகின்றனர். இந்நிலையில், நேற்று மதுரையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜவின் அளவுகோல் என்ன என்பது அண்ணாமலைக்கு நன்றாக தெரியும். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜவிற்கு பாடம் கற்பிக்கும். தேவை இல்லாமல் அண்ணாமலை ஏதாவது பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு நப்பாசை இருக்கிறது. ஏற்கனவே, நயினார் நாகேந்திரன் பேசியதற்கு எப்படி வாங்கி கட்டி கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தமிழகம் பெரியார், அண்ணா உருவாக்கிய திராவிட பூமி. தமிழகத்தின் வளர்ச்சியுடன் இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலமும் போட்டியிட முடியாது. அண்ணாமலை என்ன பேசினாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆளுகிற பொறுப்பை திராவிட இயக்கங்களுக்குத்தான் மக்கள் கொடுப்பார்கள். ஒரு போதும் பாஜவிற்கு அளிக்க மாட்டார்கள். பிரதமர் நினைத்ததை சாதித்துக் கொண்டு இருக்கிறார். கொள்கை என்பது வேஷ்டி மாதிரி. கூட்டணி என்பது துண்டு மாதிரி. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுபடும். அடுத்த தேர்தலில் மக்களின் மனநிலையை அறிந்து பாஜவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்வோம்” என்று அவர் தெரிவித்தார்.