ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுட்டிருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கமல்ஹாசனின் கொள்கைகள் பணத்திற்காக விலை போவது என அனைவருக்கும் தெரியும். இந்த கொள்கையின் அடிப்படையில் இருப்பவர்கள் அந்த காலத்தில் இருந்து அரசியலில் இருந்தவர்கள். இந்த காலத்தில் இருப்பவர்கள் பணத்திற்காகத்தான் விலை போகிறார்கள். கமல்ஹாசன் திரைப்படங்களில் நடிப்பதற்கு கிடைக்கும் பணத்தை விட அதிகமாக தருவதாக சொல்லி இருப்பார். அதனால் கால்ஷீட்டை இங்கே கொடுத்துள்ளார்.
அவரை அரசியல்வாதியாக நாங்கள் பார்க்கவில்லை. அவர் உலகநாயகன். சிறந்த நடிகர் அவ்வளவுதான். அவர்களுக்கு கூடும் மக்கள் கமல்ஹாசனை பார்க்கத்தான் வருவார்கள். அவரது பேச்சை கேட்டால் திமுகவிற்கு ஓட்டு போட நினைப்பவர்கள் கூட ஓட்டு போடமாட்டார்கள். இதுதான் உண்மை நிலவரம். அவர் பேசுவது அவருக்கும் புரியாது. மக்களுக்கும் புரியாது. அவர் கொள்கைவாதியும் கிடையாது.
திமுக என்ன நேற்று முளைத்த கட்சியா.? யார் யாரை எப்படி அமைதிப்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும். அமைச்சர்கள் சட்டத்திற்கு புறம்பாக செய்யும் தவறுகளை அதிகாரிகள் தடுக்க வேண்டும். விஞ்ஞானிகள் புதிதாக எதாவது கண்டுபிடித்தால் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கிறார்கள். அதுபோல் திமுக இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர செய்யும் யுக்திகளுக்கு நோபல் பரிசினை கொடுக்கலாம்” எனக் கூறினார்.