நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றது. கூட்டணியில் ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைத் தேர்தல் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்தார். இதனிடையே வைகோவுக்கு தேச துரோக வழக்கில் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
ஒருவேளை வைகோ மனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதில் ஒருவரை நிறுத்த தி.மு.க. முடிவெடுத்தது. இந்த நிலையில் என்.ஆர்.இளங்கோ திமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக எனக்காக மட்டும் தான் ராஜ்யசபா சீட் ஒதுக்கியது. நான்தான் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, திமுக சார்பில் ஒருவரை வேட்பு மனு தாக்கல் செய்யும்படி கூறினேன். நிச்சயம் எனது மனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
இந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் மனுவை ஏற்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் மற்றும் கட்சி சாராதவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.