“கலைஞர் நிச்சயமாக உயரமான எண்ணங்களை உடையவர். அவரது பேனா பலபேரை உயரத்துக்கு கொண்டு வந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, “காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்றில் இருந்து 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது வெயில் காலமாக இருப்பதால் மதியம் வெளியில் செல்வதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். நமக்கு சளி, காய்ச்சல் தொல்லைகள் இருந்தால் நாம் வீட்டில் இருப்பது நல்லது. பொது இடங்களில் இப்போது கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கிறோம். மீண்டும் அந்த கட்டுப்பாடுகள் வந்தால் நன்றாக இருக்கும்.
உயரமான சிலைக்கு உதாரணமாக வல்லபாய் படேல் சிலை உள்ளது. அந்த சிலை வைக்கும் போது சில விமர்சனங்கள் வந்தாலும் கூட எல்லோரும் ஒரு முறையாவது அந்த சிலையை பார்க்க வேண்டும். சிலையை சுற்றி 7 கிலோமீட்டருக்கு தெரிகிறது என்பது மட்டுமல்ல. அது பழங்குடியின மக்களுக்கு எவ்வளவு வாய்ப்புகளை தருகிறது. நமக்கு எவ்வளவு வருமானத்தை ஈட்டித் தருகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் பொறியியல் அற்புதத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பது வல்லபாய் படேலின் சிலை.
கலைஞர் நிச்சயமாக உயரமான எண்ணங்களை உடையவர். அவரது பேனா பலபேரை உயரத்துக்கு கொண்டு வந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பேனா சிலையை வைத்து தான் அவரை அடையாளப்படுத்த வேண்டும் என்பது இல்லை. அவரது எழுத்துகள் தான் அவருக்கு அடையாளம். அவரது எழுத்துகளை படிப்பது தான் அவருக்கு அடையாளம். பேனா சிலை மட்டும் அவருக்கு அடையாளமாக இருக்குமா என நான் நினைக்கவில்லை. கலைஞரின் ஒவ்வொரு எழுத்துகளும் மதிக்கப்பட வேண்டியது தான். நான் வேறு கொள்கை உடையவளாக இருந்தாலும் என்றுமே கலைஞரின் எழுத்துகள் மீது எனக்கு மரியாதை உண்டு” எனக் கூறியுள்ளார்.