ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும், மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதற்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கமலின் உடலில் காங்கிரஸின் ரத்தம்தான் ஓடுகிறது என்று கூறிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிக்க வேண்டும் என கமலை சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். இந்நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “எங்க அண்ணன் கமல்ஹாசன் மீது எனக்கு நிறைய அக்கறை இருக்கிறது. ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும், ரத்தத்தில் அணுக்கள்தான் ஓடவேணும். தேவையில்லாமல் காங்கிரஸ் எல்லாம் ஓடக்கூடாது. இடைத்தேர்தலில் திமுகவுடைய எதிர்ப்பலைகள் உறுதியாக இருக்கிறது. அட்சிக்கு வந்தால் கொடுத்த வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள். ஆனால் நிறைவேற்றவில்லை. அவர்கள் மக்களுக்கு காசுகொடுத்து வெற்றிபெற நினைக்கிறார்கள், நாங்கள் கருத்துகளின் மூலம் வெற்றிபெற நினைக்கிறோம்” என்றார்.